×

எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடா தேர்வு செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 14ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் கோரிக்கை மனு

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடா தேர்வு செய்ய வரும் 14ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் மற்றும் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவித்து ஒரு மாதம் கடந்த நிலையில் அதிமுக சார்பில் இன்று வரை எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும் அதிமுகவின் கொறடா தேர்வு செய்யாமல் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டிக்கு இடையே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தற்போது புதிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதனால் அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி மற்றும் கொறடா தேர்வுக்கான எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை செய்து வருகிறது.  ஆனால், தற்போது கொரோனா காலம் என்பதால் ஒரு இடத்தில் 4 பேருக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்று காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது சில தளர்வுகளுடன் முழு ஊரங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் கூட்டம் நடத்த வேண்டும் என்றால் முறையாக தமிழக காவல்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.இதையடுத்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று டிஜிபி திரிபாதியை நேரில் சந்தித்து எம்எல்ஏ கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார்.பின்னர் டிஜிபியை சந்தித்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 14ம் தேதி 12 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் மனு அளித்துள்ேளாம். சட்டமன்ற கட்சயின் துணை தலைவர் மற்றும் கொறடா தேர்வு நடைபெற உள்ளது. அப்போது எந்த சலசலப்பும் பரபரப்பும் ஏற்படாது. அதிமுக ராணுவ கட்டுப்பாட்டு உடைய இயக்கம். கட்சி தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கட்சி தலைமை பலமுறை அறிவித்துள்ளது. எங்களுக்கு நேற்று, இன்று, நாளை ஒரே நிலைப்பாடு தான். சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக எழுச்சியோடு சென்று கொண்டிருக்கிறது. இதே நிலைதான் தொடரும். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். எனவே, அதிமுகவின் இரட்டை தலைமையை ெதாண்டர்கள், மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் எங்களுக்கும் திமுகவிற்கும் மூன்று சதவீத அளவில் வாக்கு வித்தியாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.* துணைத்தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டிதுணை தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. துணை தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார். நான் எப்போதும் இரண்டாவது தலைவராகவே இருக்க வேண்டுமா என்று போர்க்குரல் எழுப்பி வருகிறார். இதனால் அந்த பதவியை தனக்கு நெருக்கமான கே.பி.முனுசாமிக்கு கொடுக்க எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். அல்லது வேலுமணிக்கு கொடுக்க விரும்புகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வேண்டாம் என்பதால், அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கும் பன்னீர்செல்வத்தின் சொந்த சமுதாயத்தை சேர்ந்த வைத்திலிங்கம் அல்லது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்று ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் துணை தலைவர், கொறடாவை தேர்வு செய்வதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடங்குவதற்குள் போட்டியாளர்களை சமாதானப்படுத்துவது அல்லது ஓ.பன்னீர்செல்வத்தையே சமாதானப்படுத்துவதில் சில தலைவர்கள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டள்ளனர்….

The post எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடா தேர்வு செய்ய அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 14ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vice-President of the Opposition ,Korada ,DGP ,Chennai ,vice president ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...